செய்திகள்
பிரதமர் மோடி

தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் -பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2021-06-07 17:39 IST   |   Update On 2021-06-07 18:43:00 IST
நாட்டில் 7 நிறுவனங்களில் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதாகவும், இதில், 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய். 

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயில் மற்றும் விமானம் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அதிகரித்தபோது, இந்தியா தனது குடிமக்களை எப்படி காப்பாற்றப்போகிறது என உலக நாடுகள் சந்தேகப்பட்டன. உலக நாடுகளின் சந்தேகத்தை , தடுப்பூசி உற்பத்தி செய்ததன் மூலம் தீர்த்துள்ளோம். 




கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? குறிப்பிட்ட நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 2 மருந்துகள் உருவாக்கப்பட்டன. தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. தற்போது 23 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

வரும் நாட்களில் தடுப்பூசி அதிக அளவில் வழங்கப்படும். நாட்டில் 7 நிறுவனங்களில் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. குழந்தைகளுக்கான 2 தடுப்பூசிகள் மீது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இனி அனைத்து தடுப்பூசிகளும் மத்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் மேற்கொள்ளும் 25 சதவீத தடுப்பூசி பணிகள் இப்போது மத்திய அரசால் கையாளப்படும். இது வரும் இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். 


18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் 21ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் நாட்டுமக்கள் கைவிட்டு விடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News