செய்திகள்
ஆடுகளுடன் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் ஆளுநர் மாளிகை வாசலில் ஆடுகளுடன் போராட்டம்

Published On 2021-05-19 17:57 IST   |   Update On 2021-05-19 17:57:00 IST
மேற்கு வங்காளத்தில் ஆளுநர் மாளிகை வாசலில் சிலர் செம்மறி ஆடுகளைக் கொண்டு வந்து நிறுத்தி போராட்டம் நடத்ய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை முன்பும் போராட்டம் நடத்தினர். அதோடு சிலர் ஆளுநர் மாளிகை வாசலில் செம்மறி ஆடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்த இடத்தில் அதிகப்படியான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் செம்மறி ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச்சொல்லவே இல்லை. மாறாக அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதனை ஆளுநர் மாளிகைக்குள் இருந்து பார்த்த ஆளுநர் ஜக்தீப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக கடுமையாக கருத்தையும் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘‘ராஜ்பவன் கேட் முன்பாக போலீசார் நின்று கொண்டிருக்குபோதுகூட சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இடத்திலும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளது. ராஜ்பவனின் வடக்கு கேட்டில் சிலர் இரண்டு மணி நேரமாக போலீசார் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது.



அதே பகுதியில் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொண்டு வந்து நிறுத்தி போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனை ஏராளமான போலீசார் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆடுகளுடன் வந்த நபரை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று காரசாரமாக எழுதியுள்ளார்.

Similar News