செய்திகள்
பிரதமர் மோடி

தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Published On 2021-01-25 01:22 GMT   |   Update On 2021-01-25 02:28 GMT
தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில், பொய்களையும், வதந்திகளையும் சரியான தகவல்கள் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நாளை இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்கிற என்.சி.சி. வீரர்கள் (தேசிய மாணவர் படை), என்.எஸ்.எஸ். என்னும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

சவாலான தருணங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள், தங்கள் பங்களிப்பை எப்போதும் செய்துள்ளன. கொரோனா காலத்திலும்கூட, நீங்கள் செய்த பணிகள் பாராட்டத்தகுந்தவை. அரசுக்கும், நிர்வாகத்துக்கும் இது தேவைப்பட்டபோது, நீங்கள் தன்னார்வலர்களாக முன்வந்து உதவியது போற்றுதலுக்குரியது.

இப்போது நீங்கள் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். நீங்கள் சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தில், நாட்டிற்கு உதவ நீங்கள் முன்வரவேண்டும். ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் குறித்த சரியான தகவல்களை நீங்கள் அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் தங்கள் கடமையை செய்து இருக்கிறார்கள். இப்போது நாம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டும். பொய்களை, வதந்திகளை பரப்புவோரை நாம் சரியான தகவல்கள் மூலம் தோற்கடிக்க வேண்டும்.

யாரோ ஒருவர் சொல்வதின்மூலம் இந்தியா சுய சார்பு அடைந்து விடாது. உங்களைப் போன்ற இளைஞர்களின் செயல்களால்தான் அதை அடைய முடியும். நீங்கள் அதற்கான திறன்களை கொண்டிருக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டுதான் 2014-ம் ஆண்டு, எங்கள் அரசு பதவிக்கு வந்தபோது, திறன் மேம்பாட்டுக்கென்று ஒரு அமைச்சகத்தை உருவாக்கினோம். பல்வேறு திறன்களுக்காக இதுவரை 5 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், வெறுமனே பயிற்சி மட்டுமே அளிக்கப்படுவதில்லை. வேலை வாய்ப்பு பெறுவதற்கும் உதவி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News