செய்திகள்
சுரிந்தர் சவுத்ரி

இந்தியர்கள் ஜம்மு காஷ்மீரில் குடியேறினால் கற்பழிப்பு அதிகரிக்கும்: மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர்

Published On 2020-10-28 14:57 GMT   |   Update On 2020-10-28 14:57 GMT
மத்திய அரசின் நில வாங்குதல் சட்டம் ஜம்மு காஷ்மீரில் கற்பழிப்பு சம்பவங்களை அதிகரிக்க வழிவகுக்கும் என பிடிபி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஜம்மூ காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்காக ஜம்மு காஷ்மீருக்கான 26 மாநில சட்டங்களை ரத்து செய்தும், மாற்று சட்டத்தை அமல்படுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மு காஷ்மீரில் அசையா சொத்துக்களை வெளி மாநில மக்கள் யாரும் வாங்க முடியாது. புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 

புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் வெளியாட்கள் ஜம்மூ காஷ்மீரில் நிலம் வாங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுரிந்தர் சவுத்ரி கூறும்போது “ஜம்முவுக்கு பணக்கார டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபு உள்ளது. நாங்கள் நாட்டிற்காக தியாகங்களை செய்துள்ளோம். அவர்கள் (வெளியாட்கள்) இங்கு குடியேற வந்தவுடன் கற்பழிப்பு போன்ற குற்றங்களைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் கூறவில்லை.

நாங்கள் சொல்வது அசாம் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியில் இருந்து வரக்கூடாது, ஏனெனில் அவர்கள் வேலைகளை பறிப்பார்கள்.

இன்று, ஜம்மு பகுதி மிகவும் அமைதியானது. இங்கே ஜம்முவில் பெண்கள் படிக்க பல்வேறு கிராமங்களிலிருந்து வருகிறார்கள். ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட பரிதாபாத்தில் என்ன நடந்தது என்பதையும், ஹத்ராஸில் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் காணலாம். கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் தேசிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன.’’ என்றார்.
Tags:    

Similar News