செய்திகள்
கனமழையால் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்

தெலுங்கானா : கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 30 பேர் பலி

Published On 2020-10-14 23:27 GMT   |   Update On 2020-10-14 23:27 GMT
தெலுங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், தெருக்கள், வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

நேற்று முதல் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஐதராபாத், ரங்காரெட்டி மாவட்டங்களிலின் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. பலர் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டனர். மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற மாநில, தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர், போலீசார் என அனைத்து தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் நேற்று முதல் பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் பல்வேறு விபத்துக்களில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஐதராபாத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவிற்கு தேவையான உதவிகள் வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 

தெலுங்கானாவில் கனமழை மேலும், சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News