செய்திகள்
ராகுல்காந்தி

பிரதமருக்காக மக்களின் எதிர்காலத்தை அடகு வைக்கும் முதல்-மந்திரிகள் - ராகுல்காந்தி கடும் தாக்கு

Published On 2020-10-12 23:06 GMT   |   Update On 2020-10-12 23:06 GMT
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக கடன் வாங்க சம்மதித்துள்ள முதல்-மந்திரிகள், மக்களின் எதிர்காலத்தை பிரதமருக்காக அடகு வைப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. கொரோனா காரணமாக, நிதி இல்லாததால், ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 கடன் திட்டங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

அதை பா.ஜனதா ஆளும் மாநிலங்களும், பா.ஜனதாவுக்கு ஆதரவான கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், அந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

1. ஜி.எஸ்.டி. வருவாயை மாநிலங்களுக்கு அளிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. 2. பிரதமராலும், கொரோனாவாலும் பொருளாதாரம் உருக்குலைந்தது. 3. பிரதமர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி வரிக்குறைப்பு செய்தார். தனக்காக ரூ.8 ஆயிரத்து 400 கோடிக்கு 2 விமானங்கள் வாங்கினார்.

4. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பணம் இல்லை என்று மத்திய அரசு கூறியது. 5. கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் நிதி மந்திரி கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட மாநிலங்களின் மக்களை நான் கேட்கிறேன். பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்-மந்திரி ஏன் அடகு வைக்கிறார்?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்கும் ‘பெண்கள் பாதுகாப்புக்காக பேசுங்கள்’ என்ற ‘டுவிட்டர்’ பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அதில், ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் சென்றபோது, உத்தரபிரதேச மாநில அரசு தடுத்தது. அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் அவர்களை சந்தித்ததில் இருந்தே அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதும்தான் மாநில அரசின் வேலை. ஆனால், அந்த வேலையை செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகிறது.

மாநில அரசின் செயல், மனிதத்தன்மை இல்லாததாகவும், நெறிமுறை அற்றதாகவும் இருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை காது கொடுத்து கேட்பதற்கு பதிலாக, அவர்கள் மீதே பழி சுமத்துகிறார்கள். இது, வெட்கக்கேடான செயல்.

அதற்காக பெண்கள் மவுனமாக இருக்க மாட்டார்கள். ஒரு பெண் பாதிக்கப்பட்டால், லட்சக்கணக்கான பெண்கள் குரல் கொடுப்பார்கள். பெண்கள் பாதுகாப்பை பெண்களே பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News