செய்திகள்
நளின்குமார் கட்டீல்

மந்திரி பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்வார்: நளின்குமார் கட்டீல்

Published On 2020-10-03 01:54 GMT   |   Update On 2020-10-03 01:54 GMT
பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் சி.டி.ரவி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூர் :

கர்நாடக சுற்றுலாத்துறை மந்திரியாக இருப்பவர் சி.டி.ரவி. இவர் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறினார். கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தான் ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வழங்குவேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற எழுதப்படாத விதிமுறை இருக்கிறது என்றும், அதேபோல் 75 வயது ஆனவர்களுக்கு அதிகார அரசியலில் இருந்து ஓய்வு வழங்கப்படுகிறது என்ற விதிமுறையும் உள்ளது என்றும் கூறினார்.

இதன் மூலம் அவர் மறைமுகமாக 78 வயதாகும் எடியூரப்பாவை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் தான் மந்திரி பதவியில் தொடர விரும்புவதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் துமகூரு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரி சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார். ராஜினாமா கடிதத்தை எழுதி வைத்திருப்பதாகவும், அதை முதல்-மந்திரியிடம் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Tags:    

Similar News