செய்திகள்
கூட்டத்தில் பேசிய மேற்குவங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ்

கொரோனா வைரஸ் போய்விட்டது - எங்கள் கட்சி கூட்டம் நடைபெறுவதை தடுக்கவே ஊரடங்கை அமல்படுத்துகிறார்கள் - பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-09-13 10:19 GMT   |   Update On 2020-09-13 10:19 GMT
மேற்குவங்காளத்தில் கொரோனா வைரஸ் போய்விட்டது எனவும் தங்கள் கட்சி பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதை தடுக்கவே அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாகவும் அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மத்திய அரசு இன்று காலை வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 36 லட்சத்து 24 ஆயிரத்து 197 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளத்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மேற்கு வங்காளத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனாவை கட்டுப்படுத்த மேற்குவங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் கொரோனா வைரஸ் போய்விட்டதாக அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் ஹோஹ்லி நகரில் பாஜக சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் திலிப் கோஷ், ’இந்த கூட்டத்தை பார்த்த உடன் மம்தா பானர்ஜிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மிகுந்த கவலைபடுவார்கள். கொரோனா போய்விட்டது. 

பாஜக சார்பில் நடைபெறும் கூட்டங்கள், பேரணியை நிறுத்தும் வகையில் மம்தா பானர்ஜி வேண்டுமென்றே தேவையில்லாமல் மாநிலத்தில் ஊரடங்கை அமல்படுத்துகிறார்.

ஊரடங்கை அமல்படுத்துவது கொரோனா மீதான பயத்தில் அல்ல. பாஜக மீதான பயத்தால் தான் மாநிலத்தில் மம்தா ஊரடங்கை அமல்படுத்துகிறார்’ என்றார்.

Tags:    

Similar News