கேரளாவில் கோவிட் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்கியதில் பல கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகளில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகள் என்ற போர்வையில் சுகாதார துறையை மாநில அரசு பொன்முட்டையிடும் வாத்தாக கருதுகிறது.
கோவிட் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்கியதில் பல கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பி.பி.இ. கிட் ஒன்றின் விலை ரூ.350 ஆகும். ஆனால் அதனை அரசு ரூ.1550-க்கு வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மட்டுமே ரூ.6 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவிட் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு எவ்வளவு பணம் ஒதுக்கியது? அந்த பணம் எவற்றிற்கு செலவிடப்பட்டது? என்பது பற்றிய விபரங்களை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் இது தொடர்பான தணிக்கை அறிக்கையையும் அரசு வெளியிட வேண்டும்.
காய்ச்சல் சோதிக்கும் கருவி, முக கவசங்கள் வாங்கியதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இதுபற்றியும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆம்புலன்சு ஊழியர்கள் நியமனத்திலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே குற்ற பின்னணி கொண்டோர் இப்பணியில் இணைந்துள்ளனர். இதனால் பல பெண்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவற்றிற்கு சுகாதார துறையும், மாநில அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.