செய்திகள்
உச்ச நீதிமன்றம்

கொரோனா காலத்தில் வயதானவர்களுக்கு உதவி- மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2020-09-07 08:06 GMT   |   Update On 2020-09-07 08:06 GMT
கொரோனா காலத்தில் முதியோரை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக மாநில அரசுகள் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த தொற்றில் இருந்து வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வழக்கறிஞருமான அஷ்வனி குமார் தாக்கல் செய்த அந்த மனுவில் முதியோருக்கு தேவையான மாஸ்க்குகள், சானிடைசர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிடும்படி கூறியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தகுதியுள்ள முதியவர்களுக்கும் தவறாமல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான மருந்துகள், மாஸ்க்குகள், சானிடைசர்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இது தொடர்பாக மாநில அரசுகள் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 4 வாரங்களுக்குள் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News