செய்திகள்
மழை வெள்ளம்

மழை வெள்ள சேதங்களை பார்வையிட‌ மத்தியக்குழுவினர் இன்று கர்நாடகா வருகை

Published On 2020-09-07 06:59 GMT   |   Update On 2020-09-07 06:59 GMT
வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழுவினர் இன்று வருகின்றனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநில‌த்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1‍-ந்தேதி முதல் கனமழை பெய்தது. இந்த மழையின்போது பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த‌னர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 4,400 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் 7 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், 1.41 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை நீரில் நாசமாகியுள்ளன. இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணைச் செயலாளர் கே.வி.பிரதாப் தலைமையிலான 6 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று வருகின்றனர்.

முதல்-மந்திரி எடியூரப்பா, தலைமைச் செயலாளர் விஜய்பாஸ்கரை ஆகியோரை சந்தித்து வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து கேட்டறிகிறார்கள். 3 நாட்கள் பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தரும் மத்தியக்குழுவினர் நாளை(செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடகு, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்கிறார்கள்.

அதன்பிறகு பெங்களூருக்கு திரும்பும் மத்தியக் குழுவினர், வருவாய்த் துறை மந்திரி அசோக், வருவாய்த் துறை உயரதிகாரிகளைச் சந்தித்து வெள்ளச்சேதங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிகிறார்கள். கர்நாடகத்தில் வெள்ளச் சேதங்கள் குறித்து திரட்டிய விவரங்களின் அடிப்படையில் இழப்பீட்டை மதிப்பிட்டு, அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் மத்தியக்குழு அளிக்கவிருக்கிறது. இதன் அடிப்படையில், கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிவாரண உதவிகளை வழங்கும் என கர்நாடகா அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News