செய்திகள்
காங்கிரஸ்

பாரபட்சமாக செயல்படுவதாக‘பேஸ்புக்’ மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

Published On 2020-09-04 03:22 GMT   |   Update On 2020-09-04 03:22 GMT
ஒருதலைபட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு ‘பேஸ்புக்’ பதில் அளித்து கடிதம் எழுதி உள்ளது. வெறுப்புணர்வு பதிவுகளை அகற்றிவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’ சமூக வலைத்தளங்களின் இந்திய தலைமை குழு, ஆளும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் நடத்தையை கொண்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளான வால்ஸ்டிரீட் ஜர்னல், டைம் ஆகியவை பரபரப்பு செய்தி வெளியிட்டன.

இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துக்கொண்டது.

இந்திய ஜனநாயக செயல்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்தில் ‘பேஸ்புக்’ தலையிடுவதாகவும், ஆளும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் வெறுப்புணர்வு பேச்சில் விதிகளை மென்மையாக கையாள்வதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

மேலும் இதுகுறித்து ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இருமுறை கடிதம் எழுதினார்.

அவற்றுக்கு பதில் அளித்து கே.சி.வேணுகோபாலுக்கு ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பொது கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் நீல் பாட்ஸ் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி சார்பில் நீங்கள் எழுப்பிய கவலைகள், செய்துள்ள பரிந்துரைகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம்.

முதலில் நாங்கள் பாகுபாடற்றவர்கள் என்பதை கூற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறோம்.

எங்கள் தளங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகிற தளங்களாக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்.

நாங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எல்லா விதத்திலும் வெறுப்பையும், மத வெறியையும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் பாரபட்சமற்றவர்கள்.

பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் வெறுக்கத்தக்க உள்ளடக்கம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். மதம், சாதி, இனம், தேசிய வம்சவாளி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில், மக்களுக்கு எதிரான தாக்குதல்களை எங்கள் தர நிலைகள் தடை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

வெறுப்புணர்வு பேச்சு கொள்கைக்கு ஏற்ப, எங்கள் தளங்களில் இந்தியாவில் உள்ள பொது நபர்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றி விட்டோம். அப்படி அகற்றுவதை தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News