செய்திகள்
நிதின் கட்காரி

சிறப்பு ரெயில் கோரிக்கை: நிதின் கட்காரி எதிர்ப்பு

Published On 2020-04-23 09:12 IST   |   Update On 2020-04-23 09:12:00 IST
ஊரடங்கு மே 3-ந் தேதிக்கு பிறகு விலக்கப்பட்டால் கூட ரெயில் சேவைகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தொடங்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கால் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

வெளிமாநில தொழிலாளர்களின் உணர்வுகளையும், அவலநிலையையும் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க முடியாது. இது (ரெயில்களை இயக்குவது) மற்றொரு நிஜாமுதீன் போன்ற சூழ்நிலையாக மாறிவிடக் கூடாது.

வைரஸ் தொற்று பரவுவதால் அவர்களை அவர்களது சொந்த கிராமங்களிலும் வரவேற்க மாட்டார்கள். இதை வெளிமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொழிலாளர்களை அடுத்த சில வாரங்களுக்கு மகாராஷ்டிரா அரசு கவனித்து கொள்ள வேண்டும். ஊரடங்கு மே 3-ந் தேதிக்கு பிறகு விலக்கப்பட்டால் கூட ரெயில் சேவைகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தொடங்கப்படும். நீண்ட காலத்திற்கு மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News