செய்திகள்
கோப்பு படம்

ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனாவா? 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Published On 2020-04-22 07:26 IST   |   Update On 2020-04-22 07:26:00 IST
ஜனாதிபதி மாளிகையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஊழியரின் உறவினருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது. இதையொட்டி 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து இரு கட்டங்களாக 40 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மாநில, மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள பாதுகாப்பு மிகுந்த ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து உடனடியாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இந்த தகவல் தவறானது என மறுக்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியரின் உறவினருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையை பராமரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள ‘பிரசிடென்ட் எஸ்டேட்’ பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர் ஒருவரின் தாயார் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவர் ‘பிரசிடென்ட் எஸ்டேட்’ பகுதியில் வசிக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதிச்சடங்கில் தூய்மை பணியாளர் பங்கேற்றார்.

இதையடுத்து அவருடைய குடும்பம் மட்டுமின்றி, ‘பிரசிடென்ட் எஸ்டேட்’ பகுதியில் அவர் வசித்து வந்த குடியிருப்பை சுற்றியுள்ள 25 குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில்தான் ஜனாதிபதி மாளிகை ஊழியரின் தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ‘பிரசிடென்ட் எஸ்டேட்’ பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Similar News