செய்திகள்
ஒற்றுமை சிலை

ஒற்றுமை சிலை விற்பனை- ஓ.எல்.எக்ஸ். விளம்பரத்தால் சர்ச்சை

Published On 2020-04-06 11:51 IST   |   Update On 2020-04-06 11:51:00 IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை கொடுப்பதற்காக உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் பட்டேலின் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேல் ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையை 2018ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்பகுதி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலையை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் கடந்த சனிக்கிழமை விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து விளம்பரம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து குஜராத் போலீசார் தேடி வருகின்றனர். இந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுபோன்ற விளம்பரம், சர்தார் படேலை மதிக்கும் பல கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Similar News