செய்திகள்
மாணவர்களை விரட்டியடிக்கும் போலீசார்

டெல்லியில் தொடரும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் : போலீசார் தடியடி

Published On 2019-11-18 14:20 GMT   |   Update On 2019-11-18 14:20 GMT
டெல்லியின் முக்கிய சாலையில் போராட்டத்தை தொடர்ந்துவரும் ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
 
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 

இதற்கிடையில், அப்பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கான கட்டணத்தை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல்  உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு போன்ற பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. 

இந்த புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.  ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த போராட்டத்திற்கு அடிபணிந்த பல்கலைகழக நிர்வாகம் விடுதி கட்டணத்தை சற்று குறைத்து உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும், கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யவேண்டும், புதிதாக நடைமுறப்படுத்தப்பட்டுள்ள உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு விதிமுறைகளை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஜேஎன்யூ மாணவர்கள் 500-க்கும் அதிகமானோர் இன்று காலை பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். 

ஆனால் மாணவர்களை சஃப்தர் ஜங் கோபுரம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைகழதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.     

இதனால் மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே இன்று மாலை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மாணவர்கள் போராட்டம் தொடர்வதால் லோக் கல்யான் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News