செய்திகள்

திக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு

Published On 2019-06-16 15:42 GMT   |   Update On 2019-06-16 15:42 GMT
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி அடையும் முயற்சிக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
போபால்:

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டார்.

இந்த தேர்தலில் திக்விஜய் சிங் வெற்றி பெறுவார் என அம்மாநிலத்தில் உள்ள நிராஞ்சனா அகாடா மடத்தை சேர்ந்த ஜீயர் பாபா வைராகியானந்த் கிரி என்பவர் முன்னர் ஆரூடம் கூறியிருந்தார். அவரது வெற்றிக்காக சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்திய அவர், இந்த தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றி பெறாமல் போனால் நான் ஜீவசமாதியாகி என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது சாத்வி பிராக்யா சிங்கிடம் திக்விஜய் சிங் சுமார் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, உள்ளூர் மக்களால் ‘மிர்ச்சி பாபா’ என்றும் அழைக்கப்படும் பாபா வைராகியானந்த் கிரி முன்னர் வாக்குறுதி அளித்தவாறு ஜீவசமாதி அடையப் போவதாக தனது சீடர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, போபால் மாவட்ட கலெக்டருக்கு தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.11 மணிக்கு நான் ஜீவசமாதி நிலையை அடைய தீர்மானித்திருக்கிறேன். இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு இன்று காலை போபால் நகருக்கு திரும்பினார்.

போபால் கலெக்டர் தருண் குமார் பித்தோட் உத்தரவின்படி அந்த ஓட்டலை முற்றுகையிட்ட போலீசார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து விட்டதாக மிர்ச்சி பாபாவின் வக்கீல் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News