செய்திகள்
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட்
மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
உச்சக்கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்ததுடன் ஆலோசனைக்குழுவை அவசரமாக மேற்கு வங்காளம் அனுப்பி வைத்தது.
மேற்கு வங்காள கவர்னர் வன்முறை சம்பவம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனால் மம்தா ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப்படுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் எப்போதுமே ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரானவர்கள். இதுதான் எங்களது கொள்கை. மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகத்தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது’’ என்றார்.