செய்திகள்

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரி ஆனார்

Published On 2019-05-30 14:45 GMT   |   Update On 2019-05-30 14:45 GMT
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். மோடியைத் தொடர்ந்து அவரது மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

மோடி மந்திரிசபையில் முன்னாள் வெளியறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் இடம் பெற்றுள்ளார். அவரும் இன்று பதவியேற்றார். 

மோடி அரசில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி மாதம் வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். 2017ல் டோக்லாம் எல்லையில் இந்திய படைகளும், சீன படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியபோது, போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றினார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு டாடா குழுமத்தின் உலகளாவிய பெருநிறுவன விவகாரங்கள் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். 

அரசுப் பணியில் அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மோடி அரசு அவருக்கு கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News