செய்திகள்

சிவமொக்கா: ஓட்டலில் உணவு பரிமாறும் ரோபோ

Published On 2019-05-11 02:10 GMT   |   Update On 2019-05-11 02:10 GMT
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா :

ஓட்டல்களில் வழக்கமாக அந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் தான் உணவு சப்ளை செய்வது வழக்கம். அல்லது ஓட்டல் உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்வதுண்டு. வெளிநாடுகளில் தற்போது ஓட்டல்களில் ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிவமொக்கா நகர் வினோபாநகரில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஊழியர்களுக்கு பதில், ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள், தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தால் போதும், அவர்கள் விரும்பிய உணவை ரோபோ எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறது.



மேலும், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை அந்த ரோபோ அன்புடன் அழைத்து இருக்கையில் அமர வைக்கிறது. மேலும் அவர்களிடம் ஆங்கிலத்தில் காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் ஆகியவற்றை கூறி, ஆர்டர் பெறுகிறது. பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு செல்லும்போது, அந்த ரோபோ, நன்றி மீண்டும் வருக என்றும் கூறுகிறது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு ரோபோ மூலம் உணவு பரிமாற முடிவு செய்தேன். இதனால் சீனாவில் இருந்து புதிய ரோபோ ஒன்று இறக்குமதி செய்து ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக எனது ஓட்டலில் தான் ரோபோ மூலம் உணவு பரிமாறப்படுகிறது. இந்த ரோபோ வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறது.

வாடிக்கையாளர்களின் இருக்கை எண்ணை பதிவு செய்து, அவர்கள் கேட்ட உணவுகளை கொடுக்கிறது. இந்த ரோபோ வந்தது எனக்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளமும் மிச்சமாகிறது. இந்த ரோபோவை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். நாள் முழுவதும் வேலை செய்யும் என்றார்.

ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறுவது பற்றி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவியது. இதனால் மக்கள் ஆச்சரியத்துடன் ஓட்டலுக்கு வந்து ரோபோவை பார்த்து செல்கிறார்கள். 
Tags:    

Similar News