செய்திகள்

எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

Published On 2019-05-10 06:41 GMT   |   Update On 2019-05-10 10:05 GMT
அதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. #SupremeCourt
சென்னை:

அ.தி.மு.க. எம்.எல்ஏ.க்கள் 18 பேர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் காலியான 18 தொகுதிகளில் 16 இடங்களுக்கு கடந்த மாதம் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூவரும் டி.டி. வி.தினகரனுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பதில் டி.டி.வி.தினகரன் ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார். அதை ஏற்று ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த நோட்டீஸ் தலா 75 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அதில் 3 எம்.எல். ஏ.க்கள் மீதும் பல்வேறு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. ஒரு வாரத்துக்குள் (அதாவது மே 7-ந்தேதிக்குள்) பதில் அளிக்க வேண்டும் என்று 3 எம்.எல்ஏ.க்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால் இதை எதிர்த்து ரத்தின சபாபதி, கலைச் செல்வன் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை கடந்த 6-ந்தேதி விசாரித்த தலைமை நீதிபதி, 2 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தார். அதோடு சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் என்று தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவர் கடந்த 7-ந் தேதி சட்டசபை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே மறுநாள் 8-ந்தேதி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “என்னை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் என் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. எனவே அவரது நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரபு எம்.எல்.ஏ. சார்பில் காங்கி ரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், “ஏற்கனவே இதே போன்று ஒரு வழக்கில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக சபாநாயகர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபு எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்றுக் கொண்டார். பிரபு எம்.எல்.ஏ. மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சபாநாயகர் ஜூலை மாதம் 12-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோர்ட்டு கோடை விடுமுறை வரை 3 எம்.எல். ஏ.க்கள் விவகாரத்தில் எந்த அதிரடி திருப்பமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. #SupremeCourt
Tags:    

Similar News