செய்திகள்

சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கி சண்டை- 2 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

Published On 2019-05-08 05:07 GMT   |   Update On 2019-05-08 05:07 GMT
சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Chhattisgarh #NaxalsKilled
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய தேடுதல் வேட்டையில், மாவட்ட ரிசர்வ் படையின் பெண் கமாண்டோக்களும் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார். இந்த கமாண்டோபடையில், சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளின் மனைவிகள் என 30 பெண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். #Chhattisgarh #NaxalsKilled
Tags:    

Similar News