செய்திகள்

ஐந்தாம் கட்ட பாராளுமன்ற தேர்தல் - 1 மணிவரை வாக்குப்பதிவு நிலவரம்

Published On 2019-05-06 13:45 IST   |   Update On 2019-05-06 16:03:00 IST
பாராளுமன்றத்துக்கு ஐந்தாம் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாகவும் காஷ்மீரில் மிக குறைவாகவும் வாக்குகள் பதிவானது. #Phase5polling #pollingpc #LokSabhaElections
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களால தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) 5-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்காளம் (7), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ஜெயந்த் சின்கா, அர்ஜுன்ராம் மேக்வால், வீரேந்திர குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சத்ருகன்சின்காவின் மனைவி பூனம் சின்கா, முன்னாள் முதல்-மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பாபுலால் மாரண்டி ஆகியோர் இன்று களத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள். 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.



பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி சராசரியாக 31.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 39.26 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

அதற்கு அடுத்தபடியாக ஜார்கண்ட் மாநிலத்தில் 37.24 சதவீதம் வாக்குகளும் ராஜஸ்தானில் 33.82 சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 31.46 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசத்தில் 26.53 சதவீதம் வாக்குகளும் பீகாரில் 24.49 சதவீதம் வாக்குகளும் மிகவும் குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 6.54 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. #Phase5polling #pollingpc #LokSabhaElections 

Similar News