செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் உலகிலேயே மிக உயரமான முதல் வாக்குச்சாவடி இதுதான்

Published On 2019-04-19 06:02 GMT   |   Update On 2019-04-19 06:02 GMT
இமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019

மணாலி:

இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.

தசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.

தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோசமாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.

இதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019

Tags:    

Similar News