செய்திகள்

பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: பாஜக தேர்தல் வாக்குறுதி

Published On 2019-04-08 08:10 GMT   |   Update On 2019-04-08 08:10 GMT
பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.

நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.

பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.

தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-

ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.

* 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.

* விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.

* விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.

* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.

* சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.

* உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.

* ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.

* கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

* 2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் 2 மடங்காக உயர்த்தப்படும்.


* முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்கு முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

* நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

* பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.

* பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

* மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.

* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.

* பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.

* தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.

* குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.

* அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.

* 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.

* 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.

* நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.

* நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.

* மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.

* நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.

* அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

* பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
Tags:    

Similar News