செய்திகள்

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது

Published On 2019-04-02 21:01 IST   |   Update On 2019-04-02 21:01:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்திரைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. #AmarnathYatraRegistration #AmarnathYatra
ஜம்மு:

தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள்.

60 ஆண்டுகளுக்கு மேலாக  தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அமர்நாத் குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. நடைப்பயணமாக தான் செல்ல முடியும். மேலும், பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். எனவே, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னர் அங்கு சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டில் 46 நாட்கள் நடைபெறும் இப்புனிதயாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இந்த யாத்திரைக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.



13 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியர், 75 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண்கள் மற்றும் 6 மாத காலத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் நாட்டின் 32 மாநிலங்கள் மற்றும் டெல்லி, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு-காஷ்மீர் வங்கி, எஸ் வங்கி ஆகிய வங்கிகளின் 440 கிளைகள் மூலம் இணையதளத்தின் மூலம் படிவத்தை ‘டவுன்லோட்’ செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த ஆண்டில் சோதனை முயற்சியாக தனிநபர்களும் நேரடியாக இணையதளம் மூலமாகவும் யாத்திரைக்கு பதிவு செய்து கொள்ளலாம். சரியான முன்பதிவு அனுமதி, யாத்திரைக்கான தேதி தொடர்பான நிர்ணயம் செய்துகொள்ளாத யாரும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் பயணித்து யாத்திரை செய்ய விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஹெலிகாப்டர் டிக்கெட் மட்டுமே போதுமானது. ஆனால், மலைப்பகுதியில் செல்லும் இந்த யாத்திரக்கான உடல்தகுதி அவர்களுக்கு உள்ளது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான மருத்துவ சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதிச்சான்றிதழ்களை வழங்க அமர்நாத் ஆலய நிர்வாக குழுவினரால் மாநிலவாரியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பட்டியல் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. #AmarnathYatraRegistration #AmarnathYatra 

Similar News