செய்திகள்

ஹர்திக் பட்டேல் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2019-04-02 07:25 GMT   |   Update On 2019-04-02 07:25 GMT
கலவர வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி ஹர்திக் பட்டேல் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
புதுடெல்லி:

பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம் விஸ்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹர்திக் பட்டேலுக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹர்திக் பட்டேலுக்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, தனக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்துவிட்டது. எனவே, அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

வேட்பு மனு தாக்கலுக்கு குறுகிய நாட்களே இருந்ததால், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஹர்திக் பட்டேல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார். அதன்படி நீதிபதிகள் சந்தானகவுடர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

அப்போது, மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தனர். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருப்பதால், இப்போது அந்த வழக்கை அவசரமாக விசாரிக்கவேண்டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
Tags:    

Similar News