செய்திகள்

கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி

Published On 2019-03-14 12:33 GMT   |   Update On 2019-03-14 12:33 GMT
முப்படை வீரர்களின் துணிச்சலை போற்றும் வகையில் கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா உள்ளிட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கவுரவித்தார். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
புதுடெல்லி:

இந்தியாவின் முப்படைகளை சேர்ந்தவர்களுக்கு துணிச்சல், தியாகத்தை வெளிப்படுத்தியதை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

ராணுவத்தில் மிக உயரிய நிலையில், தனிச்சிறப்பான சேவை ஆற்றியதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு மே மாதத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர் ரஹ்மா பால் சிங், சிஆர்பிஎஃப் வீரர் ராஜேந்திர நைன் ஆகியோருக்கு இறப்புக்குப் பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த 12 பேருக்கு ஷவுர்யா சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எல் கே அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
Tags:    

Similar News