செய்திகள்

மைசூரு தொகுதியில் தேவேகவுடா போட்டி - காங்கிரஸ் விட்டு கொடுக்கிறது

Published On 2019-03-12 05:48 GMT   |   Update On 2019-03-12 07:31 GMT
கர்நாடகாவில் மைசூரு தொகுதியை தேவேகவுடாவுக்காக விட்டுத்தர காங்கிரஸ் தயாராக இருக்கிறது. #DeveGowda

பெங்களூரு:

ஜனதா தளம் (எஸ்) தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

ஆனால் இந்த தடவை இந்த தொகுதியை தனது பேரனும், மகன் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வாலுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார். எனவே தேவேகவுடா மாண்டியா தொகுதியில் போட்டியிடலாம் என முதலில் கருதப்பட்டது.

ஆனால் அந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிஹில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவேகவுடா மைசூரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். இந்த தொகுதி தற்போது பாரதிய ஜனதா வசம் உள்ளது.

கடந்த தேர்தலில் இங்கு 2-வது இடத்தை காங்கிரஸ் பெற்றிருந்தது. மைசூர் தொகுதியை தேவேகவுடாவுக்காக விட்டுத்தர காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 8 தொகுதியை ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரசுக்கு 9 எம்.பி.க்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர்.

காங்கிரஸ் கைவசம் உள்ள எந்த ஒரு தொகுதியையும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு விட்டுத்தர மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மைசூர் தொகுதி காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்றாலும், தேவேகவுடாவுக்காக கேட்பதால் அதை விட்டுத்தர காங்கிரஸ் சம்மதித்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் நேற்று இதுசம்பந்தமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

சித்தராமையா தலைமையிலான இந்த குழுவில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரராவ், கர்நாடக மேலிட தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதுசம்பந்தமாக கர்நாடக மாநிலதலைவர் குண்டுராவ் கூறும்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் பலர் தகுதியான வேட்பாளராக உள்ளனர். அதில் 2 அல்லது 3 பேர் இறுதி செய்யப்படுவார்கள். அவர்கள் பட்டியல் மத்திய தேர்வு கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மார்ச் 16-ந்தேதி நடக்கும் மத்திய தேர்வு கமிட்டி கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதை இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி சுமூகமாக தீர்வு காண்போம் என்று கூறினார்.

இதற்கிடையே நடிகர் அம்பரீசின் மனைவியும் நடிகையுமான சுமலதா தனது கணவர் கடந்த காலங்களில் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படாது என்று சித்தராமையா கூறினார்.

இதனால் சுமலதா மாண்டியா மாவட்ட காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். 18-ந்தேதி தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். #DeveGowda

Tags:    

Similar News