செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் - பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேச்சு

Published On 2019-02-25 00:36 GMT   |   Update On 2019-02-25 00:36 GMT
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசினார். #AmitShah #IllegalImmigrant #Kashmir
ஜம்மு:

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரமான ஜம்முவில் நேற்று பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்து பா.ஜனதா கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார்.

அவர், முந்தைய அரசுகள் லடாக், ஜம்மு பிரிவுகளிடத்தில் பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிகளுக்கான நிதி, வளர்ச்சித்திட்டங்களுக்காக பயன்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் முந்தைய குடும்ப அரசுகள், தங்களது சுய முன்னேற்றம் குறித்துத்தான் கவலைப்பட்டனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு பைசாவும் சாமானிய மக்களுக்கு போய்ச்சேருவதை உறுதி செய்தோம்.

பாரதீய ஜனசங்கத்தின் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி தனது உயிரை தியாகம் செய்த இடம், நமக்கே உரியது. புலவாமாவில் 40 வீரர்களின் உயிர்த்தியாகம், வீணாகப்போய்விடாது.

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிற சதிகாரர்களை தண்டிக்கும் வகையில், தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படைகளுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளித்துள்ளார்.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அமித்ஷா, டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி 28-ந் தேதி நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் உள்ள 1 கோடி பேருக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள், தன்னார்வலர்கள், நலம் விரும்பிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாட இருக்கிறார். இது உலகின் மிகப்பெரிய காணொலி காட்சியாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News