செய்திகள்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Published On 2019-02-24 03:17 GMT   |   Update On 2019-02-24 03:17 GMT
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 48 மணிநேரம் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரிக்கரின் உடல்நிலை மோசமடைந்து விட்டதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இனி அச்சப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சர்தேசாய் கூறினார்.

கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே, நேற்று மருத்துவமனை சென்று மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரானே, “ மனோகர் பாரிக்கர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை (இன்று) வீடு திரும்புவார்” எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, முதல்வர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News