செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Published On 2019-02-17 12:20 GMT   |   Update On 2019-02-17 12:20 GMT
புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
அமிர்தசரஸ்:

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் இல்லத்துக்கு இன்று சென்ற பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே மாநில அரசின் சார்பில் 7 லட்சம் ரூபாய் கருணைத்தொகையும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும் குல்விந்தர் சிங்கின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இன்றைய சந்திப்புக்கு பின்னர் குல்விந்தர் சிங்கின் வாரிசு (மனைவி அல்லது பெற்றோர் இறக்கும்வரை) அவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

மேலும், அனந்த்புர் சாஹிப் நகரில் இருந்து குல்விந்தர் சிங் வாழ்ந்த கிராமத்தை இணைக்கும் சாலைக்கு அவரது நினைவாக குல்விந்தர் சிங் சாலை என பெயரிடப்படும் எனவும் முதல் மந்திரி வாக்குறுதி அளித்தார். அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PunjabCM #monthlypension #Pulwamaattack  #CRPFpersonnel #KulwinderSingh
Tags:    

Similar News