செய்திகள்

டெல்லி ஆந்திரா பவன் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

Published On 2019-02-11 11:58 GMT   |   Update On 2019-02-11 12:33 GMT
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் டெல்லி ஆந்திரா பவன் அருகே ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Differentlyabledman #AndhraPradeshBhawan
புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 
 
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இன்று காலை 7 மணியளவில் ஆந்திர பவனில் இருந்து டெல்லி போலீசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. ஆந்திர பவன் அருகே நடைபாதையில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்துக்கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

நடைபாதையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இறந்து கிடந்தவரின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தெலுங்கில் எழுதி வைத்திருந்த தற்கொலை குறித்த கடிதத்தை கைப்பற்ற்றி, வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கின்தலி கிராமத்தை சேர்ந்த டவலா அர்ஜுன் ராவ் என்னும் அந்த மாற்றுத்திறனாளி, டெல்லி ஆந்திரா பவனில் சந்திரபாபு நாயுடு இன்று மத்திய அரசை கண்டித்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பண நெருக்கடி தொடர்பாக ஏற்பட்ட மனக்குழப்பத்தால் டவலா அர்ஜுன் ராவ் விஷம் குடித்து, இந்த தற்கொலை விபரீத முடிவை தேர்ந்தெடுத்ததாக அவரது தற்கொலை கடிதம் மூலம் தெரியவந்துள்ளது. #Differentlyabledman #AndhraPradeshBhawan
Tags:    

Similar News