செய்திகள்

வெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் மகன் திருமணத்தை நடத்தும் ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி

Published On 2019-02-08 07:59 GMT   |   Update On 2019-02-08 07:59 GMT
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார். #IAS #BasanthKumar
ஐதராபாத்:

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு கவர்னர் நரசிம்மனுக்கு இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

தற்போது பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்த பசந்த்குமார் மிக மிக எளிமையாக மகள் திருமணத்தை நடத்தினார்.

அந்த திருமணத்திற்கு அவர் செலவிட்ட மொத்த தொகையே ரூ.16 ஆயிரம் தான்.



இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். வருகிற 10-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தையும் மிக மிக எளிதாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

திருமண அழைப்பிதழ், உடை மற்றும் விருந்தாளிக்கு உணவு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவிட அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதுபோல மணமகள் குடும்பத்தினரிடமும் ரூ.18 ஆயிரத்திற்குள் அனைத்து செலவுகளையும் முடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் அவரது மகன் திருமணம் ரூ.18 ஆயிரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கவர்னர் நரசிம்மன் தொலைபேசி மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமாரை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். #IAS #BasanthKumar
Tags:    

Similar News