செய்திகள்

மத்தியபிரதேசத்தில் டிரைவரை கொன்ற டாக்டர் கைது- உடலை துண்டு துண்டாக வெட்டி ஆசிட்டில் கரைத்த கொடூரம்

Published On 2019-02-06 05:04 GMT   |   Update On 2019-02-06 05:04 GMT
மத்தியபிரதேசத்தில் டிரைவரை கொலை செய்து, உடலை ஆசிட்டில் கரைத்து, கொடூரமாக கொன்ற டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.#Madhyapradesh #Doctorarrested
ஹோஷங்காபாத்:

மத்தியபிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத்தில் உள்ள  ஆனந்த நகர் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர்  சுனீல் மந்த்ரி (56). இவர் அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். மந்த்ரியின் மனைவி வீட்டில் துணிக்கடை நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின் டிரைவர் வீரேந்திர பச்சோரி(30)யின் மனைவி கடையை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து டிரைவரின் மனைவிக்கும் டாக்டருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தன் மனைவியுடன் டாக்டருக்கு தகாத உறவு இருப்பதாக டிரைவர் சந்தேகித்துள்ளார். தன் மனைவியிடம் இருந்து விலகி விடுமாறு பலமுறை  கூறியுள்ளார். இதனை கேட்காத டாக்டர், டிரைவரை சமாதானம் செய்யும் பொருட்டு அவருக்கு சம்பளத்தை உயர்த்தி, ரூ.16000 சம்பளம் வழங்கியுள்ளார். இருப்பினும் டிரைவர் சமாதானமாகவில்லை. இதன்காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை டிரைவர், பல்லில் வலி இருப்பதாக டாக்டர் மந்த்ரியிடம் கூறியுள்ளார். சிகிச்சை அளிப்பதாகக் கூறி இரவு 9 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியினைக் கொண்டு பல முறை கழுத்தில் கீறியுள்ளார். பின்னர் வீட்டின் பாத்ரூமில் வைத்து பல நூறு துண்டுகளாக நள்ளிரவு 1 மணிவரை  நறுக்கியுள்ளார்.

மந்த்ரியின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது டாக்டர் பதற்றத்துடன் காணப்பட்டார். வீட்டின் படிகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், அவர் பல நாட்களாக திட்டமிட்டு டிரைவரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  தடயங்களை அழிப்பதற்காக, டிரைவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றில் சில துண்டுகளை ஆசிட்டில் கரைத்தாகவும், உடைகளை சாலையில் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் பாத்ரூமில் இருந்து  பல பெரிய உடல் பாகங்கள் மற்றும் சிறிய துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Madhyapradesh #Doctorarrested
Tags:    

Similar News