செய்திகள்

சிபிஐ விவகாரம் - முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா

Published On 2019-02-03 22:32 IST   |   Update On 2019-02-03 23:13:00 IST
கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். #WestBengalPolice #CBIteamdetain #MamataBanerjee
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் குமார் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி முதல் மந்திரி மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ சேனல் அருகே தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரும் பங்கேற்றார். #WestBengalPolice #CBIteamdetain #MamataBanerjee

Similar News