செய்திகள்

தேர்தல் அறிக்கையில் என்ன சேர்க்கலாம்? - பா.ஜ.க.வின் கருத்து கேட்பு இயக்கம் தொடங்கியது

Published On 2019-02-03 07:50 GMT   |   Update On 2019-02-03 07:50 GMT
பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம்? என பொதுமக்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக பா.ஜ.க.வின் கருத்து கேட்பு இயக்கம் இன்று டெல்லியில் தொடங்கியது. #BJPlaunches #Bharatkemannkibaat #BJPmanifesto
புதுடெல்லி:

விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம்? என நாடு முழுவதிலும் சுமார் பத்து கோடி பொதுமக்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக பா.ஜ.க.வினர் ‘பாரத் கே மான் கி பாத், மோடி கி சாத் (Bharat ke mann ki baat, Modi ke saath) என்ற கருத்து கேட்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களின் ஆலோசனைகளைப்பெற இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள 4 ஆயிரம் சட்டசபை தொகுதிகளுக்கு 300 வாகனங்களில் சுமார் 7,700 ஆலோசனை பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர ஆன்லைன் மூலம் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் கருத்துகளைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

மக்களின் பங்களிப்புடன் நாட்டிலேயே இதுபோன்றதொரு மாபெரும் இயக்கத்தை பா.ஜ.க.தான் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும் என இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம்? என இன்றைய நிகழ்ச்சியின்போது முதன்முதலாக ஓட்டல் சர்வர் ஒருவர் தனது கருத்துகளை தெரிவித்தார். #BJPlaunches #Bharatkemannkibaat #BJPmanifesto
Tags:    

Similar News