செய்திகள்

மகாத்மா காந்தியை கோட்சே சுலபமாக சுட்டுக்கொன்றது எப்படி? - உதவியாளர் தகவல்

Published On 2019-01-30 03:21 GMT   |   Update On 2019-01-30 03:21 GMT
தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே மிக எளிதாக நெருங்கி சுலபமாக சுட்டுக்கொன்றது எப்படி? என்பது தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். #Gandhiji #RIPGandhiji #Gandhijiassasination
புதுடெல்லி:

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி 30-ம் தேதி) நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தியை மிக எளிதாக நெருங்கி, சுலபமாக சுட்டுக்கொல்ல முடிந்தது எப்படி? என்பது தொடர்பாக காந்தியின் உதவியாளராக பணியாற்றிய கல்யாணம்(96) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கல்யாணம் இதுதொடர்பாக கூறியதாவது:-



காந்தி கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரித்திருந்தனர். அதனால், அவரை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முயன்றனர். ஆனால், இதை காந்தி மறுத்து விட்டார்.

‘பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை. என்னை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயன்றால், நான் டெல்லியை விட்டு வெளியேறி வேறெங்காவது சென்று விடுவேன்’ என காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

பாதுகாப்புக்கு காந்தி சம்மதித்து இருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களை எல்லாம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம். அவரது படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு கல்யாணம் கூறினார்.

காந்தியின் அருங்குணங்களைப் பற்றி மிக குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை தெரிவிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கல்யாணம், ‘நீங்கள் மிகப்பெரிய தலைவர் ரெயிலில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் எதற்கு?’ என்று கூறிய ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை காந்தி அன்புடன் கண்டித்தார்.

காந்தி பயணம் செய்வதற்காக தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் என்னிடம் பணத்தை தந்து எங்களது ரெயில் பயணத்துக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கி வருமாறு கூறினார்’ என தெரிவித்தார்.

1943-ம் ஆண்டு முதல் காந்தியின் மரணம் வரை அவரது உதவியாளராக பணியாற்றிய வி.கல்யாணம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



காந்தியின் உயிர் பிரிந்தபோது அவரது அருகில் இருந்த கல்யாணம் அந்த துயரச்செய்தியை அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் உள்துறை மந்திரி வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு முதல்முதலாக தெரிவித்தார்.

காந்தி மறைந்த பின்னர் லண்டன் நகருக்கு சென்ற கல்யாணம் இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் மனைவியும், ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய தோழியுமான எட்வினா மவுண்ட்பேட்டனின் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் இந்தியாவுக்கு திரும்பி தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ராஜாஜி, தேசியத்தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். #Gandhiji #RIPGandhiji #Gandhijiassasination #Mountbatten
Tags:    

Similar News