செய்திகள்

திருவனந்தபுரம் கம்யூ அலுவலகத்தில் சோதனை - பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்

Published On 2019-01-26 10:02 GMT   |   Update On 2019-01-26 10:02 GMT
திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்ததாக பெண் போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். #ChaitraTeresaJohn
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் சட்டம்- ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனராக பெண் அதிகாரி சைத்திரா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இவர், மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கல்வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

இதில், போலீஸ் நிலையம் மீது கல்வீசியவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்றும், அவர்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மறைந்திருப்பதாகவும், பெண் போலீஸ் அதிகாரி சைத்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.

அங்கு, மறைந்திருந்த குற்றவாளிகளை போலீசார் துணையுடன் பிடிக்க முயன்றார். இத்தகவல் அறிந்து ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பெண் போலீஸ் அதிகாரி கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். முதல்-மந்திரி அலுவலகத்திலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா உடனடியாக சட்டம்-ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவர், பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்டு அலுவலகத்தில் சோதனைக்கு சென்றதாலேயே பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா இடமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். #ChaitraTeresaJohn
Tags:    

Similar News