செய்திகள்

டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் -5 மாநில அரசுகளின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

Published On 2019-01-16 10:32 GMT   |   Update On 2019-01-16 11:07 GMT
டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் செய்ய கோரிய 5 மாநில அரசுகளின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt

புதுடெல்லி:

டி.ஜி.பி.க்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மாநில டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த வி‌ஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பணியமர்த்துவதாகவும் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறும் கேட்டு பிரகாஷ்சிங் என்பவர் வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்துக்கு முன்னதாக புதிய பரிந்துரை பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மாநில அரசுகள் அனுப்ப வேண்டும், மத்திய தேர்வாணையம் தேர்வு செய்த பெயர்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களில் ஒருவரை மாநில அரசு டி.ஜி.பி.யாக நியமனம் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இடைக்கால டி.ஜி.பி.யாக யாரையும் நியமனம் செய்யக்கூடாது, ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகளை டி.ஜி.பி.யாக நியமிக்க கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், டி.ஜி.பி.க்களை அந்தந்த மாநில தேர்வுக்குழுவே தேர்வு செய்து நியமிக்க அனுமதி கோரியும் கேரளா, பஞ்சாப், அரியானா உள்பட 5 மாநிலங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #SupremeCourt

Tags:    

Similar News