செய்திகள்

சட்டவிரோத பண பரிமாற்றம் - ராபர்ட் வதேரா உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2019-01-16 05:44 GMT   |   Update On 2019-01-16 05:44 GMT
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ராபர்ட் வதேரா உதவியாளரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #RobertVadra

புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த பிரபல ஆயுத தரகர் பண்டாரி. இவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் லண்டனில் அவர் 1.9 மில்லியன் பவுண்டு மதிப்பில் எஸ்டேட் வாங்கியதும், பின்னர் அந்த எஸ்டேட்டை அதே விலைக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பண்டாரியின் உறவினர் சுமித் சதாவின் மின்னஞ்சலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பண்டாரி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மின்னஞ்சல் மூலம் அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மனோஜ் அரோரா மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் லண்டனில் வாங்கப்பட்ட சொத்துக்கு ராபர்ட் வதேரா தான் உண்மையான உரிமையாளராக இருக்கலாம், சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் அந்த சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இதை அறிந்து கொள்ளும் வகையில் மனோஜ் அரோராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

அதன்படி டெல்லியில் மனோஜ் அரோராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதேபோல் கடந்த வாரமும் அவரிடம் இரண்டு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

மனோஜ்அரோரா, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடா லிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra

Tags:    

Similar News