செய்திகள்

கும்பமேளாவை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி

Published On 2019-01-10 11:51 GMT   |   Update On 2019-01-10 11:51 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. #KumbhMela
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.

வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela
Tags:    

Similar News