செய்திகள்

தொடங்கியது பாரத் பந்த் - அசாம், மேற்கு வங்காளத்தில் ரெயில் மறியல், பஸ்கள் உடைப்பு

Published On 2019-01-08 05:50 GMT   |   Update On 2019-01-08 06:48 GMT
நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. #Bharatbandh #Centretradeunions
புதுடெல்லி:

பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகிதத்தில் உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களை சேர்ந்த தேசிய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகியவை இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபடப்போவதாக அறிவித்தன.

இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பஸ் மற்றும் வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்கங்களில் 20 கோடி தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்ளில் பஸ் போக்குவரத்தும் முடங்கியது.



கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் திரளான தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா உள்பட பல நகரங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்கள் தாமதமாக சென்றன. பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். கொல்கத்தாவில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா அருகே பராசாட் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் அந்த பக்கமாக வந்த பள்ளிக்கூட பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தினார்கள். நல்லவேளையாக இதில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜாதவ்பூர் என்ற இடத்தில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை தடுத்தபோது தொழிற்சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

அசன்சால் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

இதேபோல் அசன்சால் ஹிண்ட் மோடார் உள்பட மேற்கு வங்காளத்தின் பல இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இன்றைய வேலைநிறுத்தம் வடமாநிலங்களில் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும். தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தும் இயல்பாக இயங்கி வருகிறது.  #Bharatbandh  #Centretradeunions
Tags:    

Similar News