செய்திகள்

‘பபுக்’ புயல் நாளை கரையை கடக்கிறது - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2019-01-05 06:43 GMT   |   Update On 2019-01-05 10:21 GMT
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் நாளை மாலை கரையை கடக்கிறது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CyclonePabuk
புதுடெல்லி:

தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை அந்தமானுக்கு கிழக்கு தென்கிழக்கே 720 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் ‘பபுக்’ புயல் அந்தமான் கடலை அடைகிறது.

இந்த புயலானது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மாலை அந்தமான் கடலை அடைந்து கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் அந்தமானில் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8-ந்தேதி வாக்கில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும், அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும். எனவே மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CyclonePabuk
Tags:    

Similar News