செய்திகள்

மோடி வருகையை எதிர்த்து போராட்டம் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Published On 2018-12-27 05:36 GMT   |   Update On 2018-12-27 05:36 GMT
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu

நகரி:

ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. இதையடுத்து ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதற்காக ஆந்திர மக்கள் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அன்று முதல் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.


அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:-

ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசினேன். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட அவரை பெயரை சொல்லி தான் அழைத்தேன். ஆனால் பிரதமர் மோடியை மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.

பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன.

இது எனது கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.

ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்.

அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #ChandrababuNaidu

Tags:    

Similar News