செய்திகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு உதவி செய்ய தயார் - மோடி அறிவிப்பு

Published On 2018-12-23 16:20 GMT   |   Update On 2018-12-23 16:20 GMT
இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி 222 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி அங்கு நிவாரண பணிகளில் உதவிட இந்தியா தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #PMModi #Modicondoles #Indonesiatsunami
புதுடெல்லி:

மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது.
 
அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியடைந்தனர்.

இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.

இன்று மாலை நிலவரப்படி அங்கு பலியானோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த உயிரிழப்புகளை அறிந்து துயரம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மரணம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், நமது நட்பு நாடான இந்தோனேசியாவுக்கு நிவாரணப் பணிகளில் உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் உறுதியளித்துள்ளார். #PMModi #Modicondoles #Indonesiatsunami
Tags:    

Similar News