செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2018-12-20 12:22 IST   |   Update On 2018-12-20 12:22:00 IST
திருப்பதி மலைப்பாதையில் நடமாடும் சிறுத்தைகளை விரைவில் கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். #Tirupati
திருமலை:

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2-ம் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிறுத்தை ஒன்று மலைப்பாதையை கடந்து சென்றது.

அந்த சிறுத்தை மலைப்பாதையை வேகமாகக் கடந்து சென்றதால் பக்தர்களை அது பொருட்படுத்தவில்லை. இருப்பினும் அப்பகுதியைக் கடந்த பக்தர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் வேகமாக கடந்து சென்றனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

மலைப்பகுதியில் சிறுத்தைகள் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கின்றன. ஆனால் அவை தண்ணீர் தேடி அவ்வப்போது மலைப்பாதையில் உள்ள குடிநீர் தொட்டி பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், பக்தர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சிறுத்தை வந்து சென்றது வனத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிறுத்தை ஊர் பகுதிக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அதன் கால் தடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

விரைவில் அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். #Tirupati

Tags:    

Similar News