செய்திகள்

‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல்: தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

Published On 2018-12-01 02:12 GMT   |   Update On 2018-12-01 02:12 GMT
‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் ஒப்புதல் அளித்துள்ளார். #DevendraFadnavis
மும்பை :

மராட்டியத்தில் ‘ஜல்யுக்த் சிவார்’ நீர் சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் வறட்சி குறித்தும், ‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

அப்போது நீர்சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-



‘ஜல்யுக்த் சிவார்’ மிகப்பெரிய அளவில் மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட முதல் திட்டமாகும். இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மிகப்பெரிய அளவில் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் சில இடங்களில் ஊழல் நடைபெற்றது. இருப்பினும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக ஐ.ஐ.டி. வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் 75 சதவீதத்திற்கும் குறைவாகவே மழைப்பொழிவு இருந்தபோதும், விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் உழவு தொழில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். #DevendraFadnavis
Tags:    

Similar News