செய்திகள்

கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி - ஒத்திவைப்பு

Published On 2018-11-28 07:37 GMT   |   Update On 2018-11-28 07:37 GMT
கேரள சட்டசபையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
திருவனந்தபுரம்:

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இவற்றை கட்டுப்படுத்த சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இதற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் கேரள சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சபரிமலை தொடர்பாக பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. ஒரு நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிகள் ஆரம்பமானதும் சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை விவகாரம் தொடர்பான பேனர்களையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது.



காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோ‌ஷமிட்டனர்.

அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

மேலும் கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் காங்கிரசார் கோ‌ஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #KeralaAssemblySession #SabarimalaTempleIssue

Tags:    

Similar News