செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி 500 மாவட்டங்களில் சாமியார்கள் கூட்டம்

Published On 2018-11-05 06:56 GMT   |   Update On 2018-11-05 06:56 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. #AyodhyaTemple
புதுடெல்லி:

மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான எந்த முயற்சியையும் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து மத சாமியார்கள் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அயோத்தி செல்லும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ள இந்து சாமியார்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கடந்த 2 தினங்களாக சுமார் 300 சாமியார்கள் ஒன்று கூடி ஆலோசித்த பிறகு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

முதல் கட்டமாக நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்து சாமியார்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த பொதுக்கூட்டங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய சட்டத்தை இயற்றி உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.

இந்த பொதுக்கூட்டங்கள் தவிர நாடு முழுவதும் ஊர்வலங்கள் நடத்தவும் இந்து சாமியார்கள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி அயோத்தி, நாக்பூர், பெங்களூரு ஆகிய 3 நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவான ஊர்வலங்கள் நடத்தப்பட்ட பிறகு டெல்லியில் இந்துக்களின் மிக பிரமாண்டமான ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர். டிசம்பர் மாதம் 9-ந்தேதி அந்த பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் ராமர் கோவில் தொடர்பான எழுச்சியை உருவாக்க சாமியார்கள் தீர்மானித்துள்ளனர். #AyodhyaTemple



Tags:    

Similar News